யாழ்ப்பாணச்சாதியும்-ஈழத்தமிழரும்-

இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருகிக்றோம் என்பது வேதனையானதுதான்.அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத் தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பு ஈழத் தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது.

இன்றைக்கு பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களை தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப் படுத்துவதற்குமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் தங்களை அறியாமல் வெளிப்படும் ஆணாதிக்கம் போல ஆதிக்க சாதித் திமிர்தனம் அல்லது எதோ ஒரு தனம் வெளிப்பட்டு விடுகிறது.இப்போது தமிழ்மனத்தில் சிலருக்கு நடந்ததும் அதுதான்.

உணர்வுகள் எண்டொரு வலைப்பூ அதில அவர் சோழர்,நாவலர்,வெள்ளாளம் எண்டு சொல்லுகிறவற்றுகெல்லாம் எதிர்வினைக்கும் கூட்டமும் சார்வினைக்கும் கூட்டமும் தமிழ்மணத்தில் மல்லுக் கட்ட ஆரம்பித்திருகிறது.இதில பேசுற நிறையப் பேருக்கு ஈழமும் தெரியா அங்க இப்ப வரைக்கும் சகிறவரின்ர அந்த மண்ணை விட்டு வெளியேற மனமில்லாத மக்களிண்ட வலியும் தெரியா இன்னும் சொல்லப் போனால் போராட்ட ஆரம்பமும் தெரியா .....

ஈழப் போராட்டம் என்பதே யாழ்ப்பாணத்து உயர் சைவ வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப் பட்ட ஒன்றுதான் என்பதை வரலாறு தெரிந்த யாரும் மறந்து விட மாட்டார்கள்.சைவமும் தமிழும் தனது இரு கண்கள் என்று சொன்ன நவலரும் சிங்களவர்களுக்காக வாதாடி சுதந்திரமும் பெற்றுக் கொடுத்த சேர்.பொன்.அருணாசலம்,சேர்.பொன்.இராமநாதன் ஆகியோரின் வழியில் வந்த வெள்ளாள மக்களே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கெதிரான மிதவாத அரசியலிலும் உச்சக் கட்ட தலைவர்களாக இருந்தனர்.

சிங்கள அரசின் சிங்களம் மட்டும் சட்டம் முதல் தரப்படுத்தல் வரை சகலவற்றினாலும் நேரடியாகப் பாதிக்கப் பட்டது படித்த யாழ்ப்பாண சைவ வேளாளத்தமிழனே.ஆனால் அது பொது பிரச்சனையாக்கப் பட்டது. உண்மையில் இது தமிழருகெதிரான பிரச்சனை என்பதில் எனக்கு மாற்று இல்லை.சாதிரீதியாக அடக்கப்பட தமிழன் படித்து வருகிறபோது அவனுக்கும் இந்த பிரச்சனை காத்திருந்திருக்கும் ஆக,இது ஒரு பொதுப் பிரசனைதான்.சகல போராட்டங்களிலும் வெள்ளாளர் ஏன் முதன்மை பெற்றிருந்தார்கள் என்பதை விளக்கவே இதனைச் சொன்னேன்.

மிதவாத அரசியலுக்குப் பிறகு 80 களில் வந்த ஆயுதப் போராட்ட அரசியலில் வெள்ளாள சாதியில் இல்லாத இயக்கத் தலைவர் என்றால் அது பிரபாகரன் ஒருவரே. ஆனால் அவரும் கூட தங்களை வெள்ளாளருக்கு நிகரானவர் என்று சொல்லும், முக்குவர் ,திமிலர் உள்ளிட்ட மீனவ சாதியினரை தன்னுள் இற்றைவரைக்கும் சேர்த்துக் கொள்ளாத கரையார் சமுகத்தவரே.பிற்பாடுகளில் பல்வேறு இயக்கங்களிலும் போராளிகளாக பல்வேறு சமூகப் பிரிவினரும் இணைந்து கொண்டார்கள்.தோழர் புஸ்பராசா ஒருதடவை சொன்னர் எனது பார்வையில் ஓரளவு சதியம் குறித்து சரியான பார்வை கொண்டவர் பிரபாகரன் மட்டுமே என்றார்.

விடுதலைப் புலிகளின் முழுமையான ஆழுகைக்குள் யாழ்ப்பணம் நிர்வகிக்கப் படுகையில் இந்த சாதிய நிலைப் படுதலை ஒழிப்பதற்கு சாதி பார்ப்பவர்கள் மிது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது.இது சாதியை ஒழிப்பதற்க்கு பதிலாக ஒளித்தது.அதாவது யாழ்ப்பாண வெள்ளாளர் புலிகளின் கண்களில் வெளிப்படையாகப் படாமல் சாதியை ஒளித்து(மறைத்து) வைத்தனர்.வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் மூட்டை முடிச்சுகளோடு ஒளித்து வைத்த சாதிய மூட்டையையும் தாங்கள் போகும் ஊர்கள் தோறும் நாடுகள் தோறும் கொண்டு சென்றனர்.


இந்தியாவில் இந்து ஒழிப்பு என்பதே சாதி ஒழிப்புக்கான முதல் முயற்சி.ஆனால் ஈழத்தில் நடக்கும் போரில் தமிழ் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள சைவ அல்லது இந்து அடையாளத்தை முன்னிறுத்த வேண்டிய முரண் அபத்தம் இருக்கிறது(இதற்க்கும் சின்ன வயதில் அதிகம் கருத்தியல்களை உள்வாங்கியிருக்காத ஒரு போர்வீரனான பிரபாகரன் கோயிலில் கலியாணம் முடித்ததற்கும் முடிச்சுப்போடுவது தேவையற்றது.)
சாதிய அழிப்புபற்றிய ஒரு பார்வை பிரபாகரனிடம் இருந்தது.எனினும், இன்றுவரை விடுதலைப் புலிகளால் அதில் வெற்றிகாண முடியவில்லை.ஆனால் ஒப்பீட்டளவில் சாதியம்குறைந்துள்ளது. என்றாலும் ஒரு போராட சமூகத்தில் அது இத்தனை வலூவாக இருப்பது என்பது 60 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உச்சம் பெற்ற சாதியெதிர்ப்பு போராடங்களூக்கான தேவை இன்னும் முடிந்து விடவில்லையென்பதையே காட்டுகிறது.

அதற்காக பிரான்ஸில் வதியும் சிலர் சொல்வதுபோல் ஈழத்தில் முதலில் நடக்கவேண்டியது சாதியப் போராட்டமே அப்புறம்தான் இனப் போராட்டம் என்ற விடையத்தில் என்னால் ஒத்துப் போக முடியாது.
சாதி ரீதியாக ஒடுக்கப் படும் மக்கள் பற்றிய எந்த விழிப்புணர்வுமற்று ஈழபோராட்டத்தை ஆரம்பித்தபோது இருந்த சூழல் அல்ல இப்போது இருப்பது.இப்ப நாங்கள் சாதியப் போராட்டத்தை முதலில் முன்னெடுக்க முனைவது புத்திசாலித்தனமற்றது.ஆனால் புலிகள் சாதியம் இன்னும் இருகிறது என்பதை விளங்கி சரியான நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.அதற்க்கு புலிகளுக்கு அலோசனை சொல்ல வேண்டும். முக்கியமாக அவர்கள் அந்த ஆலோசனைகளை உள்வாங்க வேண்டும்.

இப்போது, இந்த புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கட்டிக் காக்கப் படும் சாதிதான் ஒருகாலத்தில் ஒரு தீர்வு ஈழத்தமிழருக்கு கிடைக்கிற போது ஈழத்தில் ஆபத்தைக் கொண்டுவரும்.

இன்னுமொரு விடையம், ஒரு போராட்ட சமூகம் போரியல் தவிர்த்து கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எவ்வளவு பலவீனப்பட்டு போயிருகிறது என்பது அரைகுறை அரசியல் அறிவோடு தமிழ்மணத்தில் பேசுகிற சிலரைப் பார்க்கிறபோது தெரிகிறது (என்னையும் சேர்த்துதான்) போரியல் வாழ்வின் அரசியலைக் கூட நாம் புரிந்து விடாதவர்களாக இருக்கிறோமோ என்று கூட தோன்றுகிறது.

உண்மையில் இன்றைக்கும் சைவ வேளாளா மரபில் இருந்து யாழ்ப்பாண சமுதாயம் மாறவில்லை.கடந்த பேச்சுவார்த்தைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்ட சில எச்சரிக்கை ஒலிகளுள் சாதியமும் பெண்ணியமும் முக்கியமானவை.இதை ஆரூரான் உள்ளிட்ட அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புலியெதிர்ப்பு ,புலிப்பாசிசம் பேசியவை எழுதும் சாதியச் செருக்கும் கருணாபோன்றவர்களை சனநாயகவாதிகளாக அங்கிகரிக்கும் போக்கும் ஒரு புறத்தில் பெரும் சாபக்கேடய் மாறிப் போயுள்ள அதே நேரத்தில் முட்டள்தனமாக புலியாதரவென்று கூறிகொண்டு அரைவேக்காடுத்தனமாகவும் அசிங்கமாகவும் பேசுவது என்பதும் எமது ஈழப் போராட்டத்தில் இந்த கணம் வரை செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு குளிரூட்டப்பட்ட தேசஙங்களில் இருந்து யுத்த முடிவுகளை கேட்க்கத் துடிக்கும் நாம் செய்யும் துரோகம் எனகிற என்கருத்துக்கு உங்கள்ளால் மறுக்கவியலுமா?

நணபர்களே உங்களுக்கு பொழுது போகவில்லையென்பதற்காக விளையாடுகிற விடயமல்ல.இது ஒரு தொகை மக்களின் வாழ்வியல் உரிமைப் போர். அதன் அரசியல் முதிர்ச்சியின்மைகளும் பலவீனங்களும் வெளிப்படையானது.பலவீனங்களை களையவேண்டிய தேவைக்கு ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம் அதை செய்யுங்கள் வெறும் வசைபாடலகளில் இவையனைத்தையும் வீணடித்து விடாதீர்கள்.